நவராத்திரி

sri-durgai-laksmi-saraswathi

sri-sapta-kannigal

நவராத்திரி வழிபாட்டு முறை

நவராத்திரி சரிதத்தினை முனிவர் நாரதர் சொல்லி ஸ்ரீ  ராமபிரான் கடை பிடித்து சண்டிஹோமம் செய்து அம்பிகையின் அருளை பெற்று ராவணனை யுத்தத்தில் வென்றதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துர்க்காதேவி மகிஷாசுரனுடன் (அரக்கன்) 9 நாட்கள் போரிட்டு வென்று மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரினை பெற்றதாக வரலாற்று கூற்றும் வழிபாடும் உள்ளது.
நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் கொள்ளும் பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது. மாயையின் பிடியில் சிக்கும் நாம் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் விரத பூஜையாக நவராத்திரி அமைந்துள்ளது.
9 நாளும் ஏதோ ஒரு முறைப்படி விரதம் இருப்பவர்களும் உண்டு. பூஜைகளுக்கு விதிமுறைகளும் உண்டு.
பூஜை செய்பவர் சந்தனம், குங்குமத்தினை வலது கை மோதிர விரலால் மட்டுமே இட்டுக் கொள்ள வேண்டும்.
வாசனை மிகுந்த மலர்களால் பூஜிக்க வேண்டும். பூக்களை நாம் முகர்ந்து பார்க்கக் கூடாது.
மல்லிகை, ஜாதி மல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை, வெள்ளை மற்றும் சிகப்பு அரளி, பவழ மல்லி, ரோஜா, மரிக்கொழுந்து, கதிர் பச்சை போன்ற மலர்களை மிக சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும்.
பூக்களின் தண்டு பகுதி அம்பாள் பக்கம் இருக்க வேண்டும்.
படம், விக்ரகங்களில் அணிவிக்கப்படும் பூ மாலைகள் கண், காது போன்ற பகுதிகளை மறைக்காது இருக்க வேண்டும். உறுத்தாமலும் இருக்க வேண்டும்.
தாழம் பூவினை முட்கள் இல்லாது வெட்டி உபயோகிக்க வேண்டும். தாமரை போன்ற பெரிய பூக்களை 1, 9 அதன் விரிவாக்கம் என்ற முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூக்களை அர்ச்சனையின்போது அம்பிகை இருப்பதனை மனதால் உணர்ந்து பய பக்தியுடன் நிதானமாய் பாதத்தில் சேர்க்க வேண்டும். குச்சி, காம்பு, காய்ந்த பூ, மண் இவை தவறி கூட இருந்து விடாமல் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
நறுமணமான ஊதுவத்தி, தூப சாம்பிராணிகளை பயன் படுத்துங்கள். வசதிக்கேற்ப செய்தாலும் போதும். ஆனால் தரமானதாக இருக்கட்டும் .
ஊதுவத்தியினை ஆள்காட்டி, கட்டை விரல் நடுவே பிடித்து இடமிருந்து வலமாக மூன்று முறை முழு வட்டமாக சுற்றி பூஜிக்க வேண்டும்.
ஆரத்தி காண்பிப்பது நெய் தீபத்திலும், ஏகமுகமாகவும் பஞ்சமுகமாகவும் காண்பிப்பது சிறப்பு. ஆரத்தியின்போது இரண்டு வரிகளாவது அம்பிகையைப் பற்றி பாட வேண்டும். அம்பிகை காணப்பிரியை.
வீணை போன்ற அனைத்து இசை வாத்தியங்களுமே அம்பிகைக்கு பிரியமானவைதான். அதனால்தான் நவராத்திரி காலங்களில் பாட்டு, நடனம், வாத்திய கச்சேரிகள் நடைபெறுகின்றன.
அம்பாளுக்கு புடவை, சட்டை துணி, வளையல், குங்குமம், வெற்றிலை, பாக்கு என பல சீர் வரிசைகள் வைத்து பல வகை உபசாரங்களை செய்து வழிபடுவது மிக விசேஷம்.
வீட்டில் பூஜை செய்யும்போது 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை அழைத்து அவர்களை கோலமிட்ட மனை மீது உட்கார வைக்க வேண்டும். காலில் நலங்கிட்டு, சந்தன, குங்குமம் கொடுத்து, தலைக்கு பூ வைத்து அக்குழந்தைக்கு பிடித்த சாப்பாட்டினை இனிப்புகளோடு கொடுக்க வேண்டும். பின் தாம்பூலம் கொடுத்து சக்திக்கு ஏற்ப பாவாடை, சட்டை என்று கொடுப்பது அம்பிகையின் ‘பாலா’ எனும் சக்திமிகுந்த ரூபத்தினை வழிபடுவதாகும்.
நவராத்திரி நாட்களில் எவ்வாறெல்லாம் எளிதாகவும்,  சக்தியாகவும் அம்பிகையை வழிபடலாம் என்று பார்க்கலாம்.

முதலாம் நாள்:–

 

சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். நீதியை காக்கவும், தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவுமே இவள் கோப ரூபமாக காட்சியளிக்கிறாள்.

நைவேத்தியம்: சர்க்கரைப்பொங்கல்.

இரண்டாம் நாள்:– அன்னையை, வராஹி தேவியாக  கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி என்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட வராஹியின் வரம் அவசியம்.

நைவேத்தியம்: தயிர்சாதம்.

மூன்றாம் நாள்:– இறைவியை, இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே. பெரிய, பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.

நைவேத்தியம்: வெண் பொங்கல்.

நான்காம் நாள்:– சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக தரிசிக்க வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீய சக்திகளை சம்ஹாரம் செய்பவள். இவளின் வாகனம் கருடன்.

நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாள்:– அன்னையை, மகேஸ்வரி தேவியாக வழிபாடு செய்ய வேண்டும். மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழு பலனையும் பெறுவதற்கு அன்னையின் அருளை பெற வேண்டும்.

நைவேத்தியம்: புளியோதரை.

ஆறாம் நாள்:– இன்றைய தினம் சக்தியை, கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

நைவேத்தியம்: தேங்காய்ச்சாதம்.

ஏழாம் நாள்:– அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடாரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். செந்தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.

நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.

எட்டாம் நாள்:– இன்று அன்னையை, நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையை வழிபடுவது சிறப்பு தரும்.

நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

ஒன்பதாம் நாள்:– இறுதிநாளான இன்று தேவியை, ப்ராஹ்மி (சரஸ்வதி) ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்வி என்னும் கலையில் சிறந்து விளங்க, இந்த அன்னையின் அருள் நிச்சயம் தேவை.

நைவேத்தியம்: அக்கர வடிசல்.

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி